சென்னை:
ரித்துவார் நகரில்  பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட  திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை ஹரித்துவாருக்கு அனுப்பியபோது நடைபெற்ற நிகழ்ச்சி
வள்ளுவர் சிலை ஹரித்துவாருக்கு அனுப்பியபோது நடைபெற்ற நிகழ்ச்சி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“வாழ்க்கை நெறியாம் வள்ளுவத்தை இந்த உலகுக்கு வழங்கி வானளவு உயர்ந்து நிற்கும் வள்ளுவப் பெருந்தகையின் சிலை உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள பூங்காவில் கருப்பு தாளில் சுற்றுப் பட்டு குப்பைகளுடன் குப்பையாக கிடக்கிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வான்புகழ் பெற்ற திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
வள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் உலகம் முழுவதும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களில் திருக்குறள் மூன்றாவது இடத்தில்  உள்ளது. வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் திருக்குறளை படைத்ததற்காக உலகம் முழுவதும் திருவள்ளுவர் கொண்டாடப்படும் நிலையில், ஹரித்துவாரில் அவரது திருவுருவச்சிலை குப்பைப் போன்று கிடத்தி அவமதிக்கப்பட்டிருப்பதற்கு உத்தர்காண்ட் மாநில அரசும், பாரதிய ஜனதாச் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய்யும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
திருவள்ளுவரின் புகழ் அவரின் படைப்பால் தான் பெருகியதே தவிர, ஆளுயர சிலையாலோ, வானுயர சிலையாலோ வளரவில்லை. வள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை அமைக்க வேண்டும் என்று யாரிடமும் தமிழர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக, தருண் விஜய் தமக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்குடனும், தாம் சார்ந்த அமைப்புகளை தமிழகத்தில் காலூன்றச் செய்வதற்காகவும் திருவள்ளுவரை வாழ வைக்க அவதாரம் எடுத்தவரைப் போல காட்டிக் கொண்டு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார்.  அவரது இந்த முயற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போனார்கள்.
ஹரித்துவாரில் வள்ளுவருக்கு சிலை அமைக்கப் போவதாக தருண் விஜய் அறிவித்ததையடுத்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் 10 டன் கொண்ட ஒரே கல் வெட்டி எடுக்கப்பட்டு, அதில் 12 அடி நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை செதுக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த சிலை, திருவள்ளுவர் கங்கை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியிலிருந்து  சென்னைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தனித் தொடர்வண்டி மூலம் ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது. ஹரித்துவாரில் கங்கைக் கரையில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்த சிலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அங்குள்ள சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கங்கைக் கரையிலிருந்து சற்று தொலைவிலுள்ள சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்தில் சிலை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆதிசங்கரர் சிலை அருகில் திருவள்ளுவரின் சிலையை அமைக்கக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து  அருகிலுள்ள உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. விரைவில் நிரந்தமான இடத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்படும் என தருண்விஜய் அறிவித்திருந்த நிலையில் தான் அச்சிலை ஹரித்துவார் பூங்காவில் கிடக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி குறிப்பிடும் போது, ‘‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து’’ என்று கூறியுள்ளார். அதாவது, ‘‘அனிச்சம் மலரை முகர்ந்தாலே வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வரவேற்றாலே விருந்தினர் வாடி நிற்பார்’’ என்பது இக்குறளின் பொருளாகும். விருந்தோம்பலுக்கு இலக்கணம் கூறிய வள்ளுவரின் சிலையை விருந்தினராக ஹரித்துவாருக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக அலைக்கழித்து, இறுதியில் குப்பையோடு குப்பையாக போட்டிருப்பது எந்த வகையான விருந்தோம்பல்? என்று தெரியவில்லை. இது வள்ளுவருக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமதிப்பு இல்லை… உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட பெரிய அவமானமாகும்.
வள்ளுவரின் சிலை அமைக்கப்படுவதால் ஹரித்துவாருக்கு மரியாதையும், புகழும் கிடைக்குமே தவிர,  ஹரித்துவார் சிலை வைக்கப்படுவதால் வள்ளுவருக்கு எந்த வகையிலும் பெருமை சேரப்போவதில்லை. வள்ளுவரை அவமதித்த ஹரித்துவார் மண், அவரது சிலையை தாங்கும் தகுதியை இழந்து விட்டது. தம்மை அவமதித்த அம்மண்ணில் சிலையாக நிற்க வள்ளுவரும் விரும்ப மாட்டார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு தான் அவரின் சிலை அமைய சரியான இடமாகும்.
எனவே, ஹரித்துவாரில் கேட்பாரற்று கிடக்கும் வள்ளுவரின் சிலையை உடனடியாக மீட்டு, தமிழகத்திற்கு  கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தமிழ் சங்கத்தின் வளாகத்திலோ, சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும்  செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகத்திலோ வள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும்; மிகப்பெரிய விழா எடுத்து வள்ளுவர் சிலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.