கோவை: கோவை தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலை, கோவை வெள்ளக்கிணறு பகுதியில் கும்மியடித்து வாக்கு சேகரித்த நிலையில், வள்ளி கும்மி ஆடியபடி வாக்கு சேகரித்தார். மீண்டும் பிரதமராக மோடி அமரும் போது வள்ளி கும்மி கலைக்கு, உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என  உறுதி அளித்தார்.

மேலும்,  மோடி இருக்கும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, ’முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். மோடி இருக்கும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024 இல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும்.

பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும், கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், என்மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள் என்றவர்,  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா போன்றவர்களால் என்னைப்போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா என கேள்வி எழுப்பியவர், ஆட்டை கொடுமைப் படுத்தால், பிரியாணி செய்யுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருக்கின்றனர் என விமர்சித்தார்.