ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, ‘வலிமை’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘வலிமை’ தமிழக விநியோக உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளன.

படத்தில் அஜித் முதன்முறையாக ஒரு பஸ்ஸை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆன்லைன் போர்ட்டல் ஒன்றில் வெளியான அறிக்கையின்படி, அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இடம்பெறும் ஒரு சேஸிங் காட்சியில் அவர் ஒரு பஸ்ஸை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

வலிமையின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐரோப்பா செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை பல நாடுகள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் கிளைமாக்ஸை உள்ளூரிலேயே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.