சீமான் – வைரமுத்து

நியூட்ரினோ எதிர்ப்பு கடந்த ஏப் 6ம் தேதி தேனி மாவட்டம் சின்னபொட்டிபுரம் கிராமத்தில் பேச்சு

சீமான்..! நீ பெரியாரை தமிழன் இல்லை என்றாய். நம்ம ஆட்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகளாக இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்.

விடுதலைப்புலிகளை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு உலகம் முழுதும் வசூல் செய்துகொண்டிருக்கிறாய். அதற்கு ஆயிரம் ஆதாரங்கள் வைத்திருக்கிறேன். ஆனால் இதுவரை அது குறித்து பேசினதில்லை.

பாரீஸ் நகரில் விடுதலைப்புலிகளின் தளபதி பரிதியை பார்த்துவிட்டு வந்தேன். இரண்டாவது மாதம் அவர் தனது அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்குக் காரணமான இரண்டு துரோகி பயல்களை நீ உன்னிடம் வைத்திருக்கிறாய்.  இதற்கு என்னிடம் புகைப்பட ஆதாரம் இருக்கிறது. ஆனால் இந்நாள் வரை இதை யாரிடமும் நான் சொன்னது இல்லை.

நீ சொல்கிறாய்… “லட்சம் பேர் தனக்காக வருவார்கள் என்று வைகோ சொல்கிறார். ஆனால் ஐம்பது பேருடன் நடைபயணம் செல்கிறார்” என்று கிண்டலாக சொல்கிறாய்.  5000 பேர் வந்தால் சாப்பாடு போடுவதற்கு என் கட்சிக்காரர்களிடம் பணம் இல்லை. எங்கள் மாவட்ட செயலாளர்கள் வசதி படைத்தவர்கள் இல்லை. ஆகவே 300 பேர் போதும் என்று கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.

நீ ஏதேதோ அளந்துவிடுகிறாய். நீ எங்கெங்கெங்கலாம் ஏமாற்றினாய் என்று நான் ஆதாரங்களுடன் சொல்வேன். கனடாவில் ஒரு பெண்மணியை நீ ஏமாற்றிய கதையும் தெரியும்.

“உங்கள் தகுதிக்கு அவனை எல்லாம் மதித்து பேசலாமா?” என்று வைரமுத்து என்னிடம் கூறினார்.

”இல்லை.. எட்டு வருடங்களாக என்னை திட்டிக்கொண்டே இருக்கிறான். என்னை தமிழன் இல்லை என்கிறான். இதை விட முடியாது” என்றேன்.

சீமானே.. தலைவர் பிரபாகரனை இரண்டு நிமிடங்கள்தான் பார்த்தாய். உன்னை புகைப்படம் எடுக்கக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொய் பொய்யாக சொல்லிக்கொண்டு திரிகிறாய். விடுதலைப்புலிகளின் உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாய். அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

வைகோவின் தியாகத்திற்காக ஆயிரம் முறை சாகலாம் என்று பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதத்தை  இன்றும் நான் வைத்திருக்கிறேன். ஊருக்கு ஊர் பிரச்சினையை தூண்டிவிட்டு, உலகம் முழுதும் பிரபாகரன் என்னை பிரதிநிதியாக நியமித்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு திரிகிறாய். கோடிக்கணக்காக வசூல் செய்திருக்கிறாய்.

வைகோ

புரூசெல்ஸ் நகரில் நடந்த மாநாட்டுக்கு சென்றிருந்தேன். அந்த மாநாட்டில் பேச உன்னை அழைத்தபோது, மூன்று கோடி கேட்ட தகவல் எனக்குக் கிடைத்தது. “ முன்னூறு டாலர்கூட எங்களிடம் இல்லை இப்படி கேட்கிறீங்களே என்று கூறியதாக” அங்குள்ளோர் என்னிடம் வருத்தத்துடன் கூறினார்கள்.

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி என்னை ஈழ விடுதலை மாநாட்டுக்கு அழைத்தார். தண்டாயுதபாணி அந்த விழாவில் பேசும்போது, “வைகோ தமிழர் அல்ல என்று தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பேசினார். வைகோ தமிழன் இல்லை என்றால் உலகத்தில் எவனுமே தமிழன் இல்லை என்று சொன்னேன்” என்று பேசினார்.

பிறகு என்னிடம், “சீமான்தான் வைகோ தமிழரல்ல. அவரை அழைக்காதீர்கள் என்று சொன்னார்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதே போல இரண்டாவது மாநாட்டிற்கும் வைகோவை அழைக்காதீர்கள் என்று சீமான் சொல்லியிருக்கிறார்.

ஏன்.. எம்.ஜி.ஆரை மலையாளி என்றீர்களே.. விடுதலைப் புலிகளுக்கு அவர் செய்ததை விட வேறு யார் செய்திருக்கிறார்கள் நான்கூட அந்த இடத்தில் இருந்தால் செய்திருக்க முடியாது. அவர்தான் உண்மையான தமிழன். நூறு விசயங்கள் மனதிற்குள் அடைக்கி வைத்திருக்கிறேன். எடுத்துவிட்டால் தாங்க மாட்டாய்!” என்று வைகோ பேசினார்.

வைகோ தமிழர் அல்ல என்று சீமான் ஆதரவாளர்கள் பேசி வருவதும், பதிலுக்கு வைகோ ஆதரவாளர்கள் சீமானை விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. ஆனால் சில நாட்கள் முன்பாகத்தான், இது குறித்து வைகோ வெளிப்படையாக பேசினார்.

இந்த நிலையில், “சீமான் தகுதிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டுமா” என்று தன்னிடம் வைரமுத்து கேட்டதாக வைகோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.