நெட்டிசன்: பத்திரிகையாளர் கவிஞர் அ.ப.இராசா அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..
“வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டிக்கும் பெரியகுளத்துக்கும் ஐந்து கிலோ மீட்டர் இடைவெளி என்றாலும், அவர் வடுகபட்டி போய் நான் பார்த்தில்லை. பெரும்பாலும் பெரியகுளத்தில் தான் இருப்பார். வைரமுத்துவின் அத்தை எங்கள் தெருவில் தான் குடியிருந்ததால், சொந்த ஊர் வந்தால், எங்கள் தெருவில் அவரை பார்க்கலாம்.
அந்த கறுத்த மனிதனின் கம்பீரமும் வார்த்தைகளும் என்னை உறங்க விடாமல் செய்தது.
அந்த வயதில் சக நண்பர்கள் ரஜினி, கமல் ரசிகராக இருந்த போது, நான் வைரமுத்து ரசிகராக இருந்திருக்கிறேன். வைரமுத்துவை வாசிப்பது, என் பருவ போதையாக இருந்தது. வைரமுத்துவின் எழுத்தின் மேல் அப்படி ஒரு காதல்.. அப்படி ஒரு கவர்ச்சி. அதுவும் நம் மண்ணின் மைந்தன் இப்படி வானுயர வளர்ந்திருக்கிறான் என்ற மரியாதை. வியப்பு.
கம்பீரமான வைரமுத்து தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரின் அத்தை தற்கொலை செய்து கொண்ட போது, கதறி கதறி அழுத வைரமுத்துவை நான் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். ஆறுதலும் சொல்லியிருக்கிறேன். அதுவும் இரண்டு மூன்று மரணங்களில். அப்போது என் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் எழும், ‘‘வைரமுத்துக்கு கூட அழுகை வருமா’’
வைரமுத்து சாதி மறுப்பு திருமணம் செய்ததால், ஒட்டுமொத்த உறவுகளும் அவரை ஒதுக்கி வைத்தது. அந்த காலகட்டத்தில் அவருக்கு துணை நின்ற ஒரு குடும்பத்தை தான் அவர் இப்போது வரை நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறார். அக்குடும்பம் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “