சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியாக சென்று எம்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள இன்று (ஜன.,10) நடைபெற்றது. ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா.. ரங்கா.. கோஷம் விண்ணை முட்ட தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. பெருமாள் கோவில்களில் விழாக்கோலம் : தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், வெகு சிறப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்க வாசல் திறப்பு, இன்று நடைபெற்றது, இதை முன்னிட்டு பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு முன்பதிவு செய்த, 3,000 நபர்கள், காலை, 6:15 மணி முதல் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காக, கிழக்கு கோபுர வாசல் வழியாக, குளத்தின் அருகில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு, தெற்கு மாடவீதி வழியாக, 100 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படும். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோவில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சொர்க்க வாசல் திறப்பை, பக்தர்கள் கண்டுகளிப்பதற்காக, நான்கு மாட வீதிகளிலும், எல்.இ.டி., வீடியோ ஸ்கிரீன் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 32 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம், கோவில் உட்பகுதியிலும், கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக, இலவச குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதுகாப்பு காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதி இல்லை.
சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தினமும் பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து திருப்பாவை பெருமாள் உள்ளிட்ட பாசுரங்களை பாடி வந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளே கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர்.
சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது உற்சவர் ஸ்ரீ பவள வண்ணப் பெருமாள் பிரம்மாண்டமாக வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை எழுந்தருளி காட்சி அளித்தார் திருப்பாவை பாடல் பாடிய பின் பெருமாள் சன்னதியில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நுழைந்து நம்மாழ் வாருக்கு ஜடாரி பகுமானம் செய்து பரிவட்டம் கட்டி ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில் பகுதிக்கு வருகை தந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி கோவிந்தா பெருமாளே கோவிந்தா என பக்த முழக்கம் இட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதிகாலையில் பக்த்தர்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலேயே சிவஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக வைகுண்ட வாயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பாமா, ருக்மணி சாமேதராய் வேணுகோபால் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே சிவ தலங்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக கரி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதுபோல, சேலம் கோட்டை அழகிரிநாதர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக சுவாமி சடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.
கரூர் அபயப்பிரதான ரங்கநாதர் சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் ரங்கா…ரங்கா என கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
27வது திவ்ய தேசமான பழமையான திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் வான வேடிக்கையுடன் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.