சென்னை

மீண்டும் மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ தேர்வு செய்யப்பட்டு முதன்மை செயலராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

”மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் 61 மாவட்டங்களில் 25,08,786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். கிளைக் கழகம், வட்டக் கழகம், பேரூர் கழகம், நகரக் கழகம், ஒன்றியக் கழகம், பகுதிக் கழகம், மாவட்டக் கழகம், மாநகர் மாவட்டக் கழகம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.

நிறைவாக தலைமைக் கழக நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் 27.05.2023 அன்று வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களைப் போட்டியிடுபவர்கள் 01.06.2023 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 03.06.2023 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. எவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. எனவே, வேட்புமனு வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

14.06.2023 அன்று சென்னை, அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் கூடும் கழகத்தின் 29-ஆவது பொதுக்குழு இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும். அங்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி அறிவிக்கப்படும். மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு வைகோ, அவைத் தலைவர் பொறுப்பிற்கு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ், பொருளாளர் பொறுப்பிற்கு மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு டாக்டர் சி.கிருஷ்ணன், ராணிசெல்வின், கே.ஏ.எம்.நிஜாம், கழககுமார், ஜெய்சங்கர், மதுரை சுப்பையா, பூவை பாபு ஆகியோரும், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு வழக்கறிஞர் அருணாசலம், வழக்கறிஞர் நாமக்கல் பி.பழனிச்சாமி, வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், வழக்கறிஞர் பாசறை பாபு, பரமக்குடி கே.ஏ.எம்.குணா, மதுரை பி.ஜி.பாண்டியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்”

என்று கூறப்பட்டுள்ளது.