சென்னை:
கருணாநிதியை பாதுகாத்தது போல மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேப்பேரி பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பா.விஜய் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அப்போது வைகோ பேசியதாவது:
“தி.மு.க. இளைஞரணி மதுரையில் தொடங்கப்பட்ட போது நான் மு.க.ஸ்டாலினுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவரது பேச்சை அன்றில் இருந்தே ரசித்திருக்கிறேன். இன்று நான் உறுதி அளிக்கிரேன். 29 ஆண்டுகளாக எப்படி கருணாநிதியை ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாத்தேனோ, அதேபோல மு.க.ஸ்டாலினையும் கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்.
தி.மு.க.வுடன் வைகோ கரம்கோர்த்து உள்ளானே.. ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று அனைவரும் நினைக்கிறார்கள். எந்த பதவி ஆசையும், பண ஆசையும் எனக்கு கிடையாது. என் நேர்மை உலகு அறிந்தது. தான் அணிந்திருந்த கவசத்தை தர்மத்துக்காக கர்ணன் அவிழ்த்தான். ஆனால் எந்த சூழ்நிலையிலும், எதற்கும் என் நேர்மை எனும் கவசத்தை அவிழ்க்க மாட்டேன்.
தி.மு.க.வை அழிக்க பா.ஜ.க. வஞ்சக திட்டம் தீட்டிவருகிறது. திராவிட இயக்கத்தை வேரோடு அழிக்க நினைக்கிறது. இதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
எங்களது முழு பலத்தையும் தி.மு.க.வுக்கு கொடுத்து களத்தில் இறங்குவோம். திராவிடத்தை வெல்ல எந்த முயற்சிக்கும், எந்த வித சக்திகளுக்கும் அனுமதி அளிக்க மாட்டோம். தமிழகத்தில் லட்சியங்கள் வெல்ல, தர்மம் நிலைக்க தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கப்போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று வைகோ பேசினார்.