மதுரை:  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், அணைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. தற்போது நீர் இருப்பது    58.83 அடியாக உள்ளது. இதனால் . வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

வைகை அணை மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதன்மூலம்   5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது. அதுபோல மதுரை மாநகர குடிநீருக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், வைகை  அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதனால்,  அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.   வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக,  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

அதுபோல, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது.  . சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது.