மதுரை: வைகை அணை முழு கொள்ளவை எட்டும் வகையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை உள்பட பல மாவட்ட விவசாயிகளுன் நீராதாரமாக விளங்கி வருவது வைகை அணை. இந்த அணையின் முழு கொள்ளவு 71 அடி. ஆனால், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்ததால், வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (ஜனவரி 15) 66அடியை எட்டியது. இன்று அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால், இன்று இரவு அல்லது நாளை முழுக் கொள்ளவான 71அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்ட வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 69அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பு கருதி அணையின் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தாண்டு தொடக்கத்திலேயே வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிவிடும் என்பதால் பாசன பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.