மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர்மழையால் வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தேனி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான மஞ்சளாறு, சோத்துப்பாறை மற்றும் சண்முகா நதி அணைகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. அதுபோல, ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து, தற்போது தேதி, 69 அடியை எட்டி உள்ளது.
இதையடுத்து, அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி, 7 பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் 1,000 கன அடி ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டது. ற்போது உபரிநீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர வழக்கம் போல, பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 569 கன அடி நீர், கால்வாய் வழியாக திறக்கப்படுகிறது.
தொடர்ந்து அணையின் நீர்வரத்திற்கேற்ப நீர் வெளியேற்றம் அதிகரிக்கக் கூடும் என்பதால், வைகை கரையோரப் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.