அருள்மிகு துந்தி ராஜ் கணபதி கோவில் ,வாடி,வதோதரா,குஜராத்.

விநாயகப் பெருமான் அருள் பாலிக்கும்  அற்புத மரக் கோயில்!

கலை நுணுக்கங்களுடன் கூடிய இந்தியாவின் ஒரே  தேக்கு மரக் கோயில்.!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாடி நகரத்தில் உள்ள துந்திராஜ் கணபதி கோவில் முழுவதும்   நன்கு   விளைந்த தேக்கு  மரத்தால் ஆனது.

170 ஆண்டுகளுக்கு முன் கோபால்ராவ் மைரல் என்னும் திவானால் கட்டப்பட்டது.

பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்ட இந்த துந்திராஜ் கணபதி தன் துணைவியரான ரிதி (புத்தி) மற்றும் சித்தி ஆகியோருடனும், லாப் (லாபம்) மற்றும் லக்ஷ் (சுபம்) என்னும் குழந்தைகளோடும் அருள்பாலிக்கிறார். பெரிய தொந்தியுடன் காட்சி தரும் இவரை துந்திராஜ் (தொந்தி கணபதி) என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

பொதுவாகக் கணபதியின் வாகனமான மூஞ்சூறு அவர் எதிரே சாதாரணமாக இருக்கும். இங்குத் தனி பளிங்கு மண்டப சன்னிதியில் உள்ளது. முன்னங்கால்களைச் சற்றே உயர்த்தி மோதகத்தை உண்பது போன்ற வடிவமைப்பில் அழகாகக் காட்சி தருகிறது. மூஞ்சூறுவின் காதில் தங்களது வேண்டுதல்களைப் பக்தர்கள் சொல்கிறார்கள்.

கணபதியின் எதிரே சின்ன நீரூற்றும் உள்ளது.

44 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்தக்கோவில் இரண்டு அடுக்காகக் கட்டப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மராத்திய கலாச்சார ரசனையுடன் கூடிய நீலம், பச்சை, சிகப்பு, மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. அற்புதமான சிற்பங்களும், சிலைகளும் உள்ளன. முழுவதும் மிகவும் நன்கு   விளைந்த தேக்கு மரங்களால் அமைக்கப்பட்ட கோயில்.

.இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் இந்த கணபதி மிகவும் சக்தி மிக்கவர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விநாயகரை பிரம்மச்சாரி என்பர். ஆனால், வடமாநிலங்களில் அவரை குடும்பஸ்தராகவே கருதுகின்றனர்.

அவருக்கு ரிதி, சித்தி என்ற துணைவியரும், லாப், லக்ஷ் என்ற மகன்களும் இருப்பதாக கருத்து உண்டு. வடக்கே சந்தோஷி மாதா வழிபாடு பிரபலம். இவளை விநாயகரின் மகளாக கருதுகின்றனர்.

தத்துவ ரீதியாகக் காண்போமேயானால்,ரிதி[புத்தி] ==அறிவு,சித்தி ==வெற்றி,லாப்==ஆதாயம் ,லஷ்==சுபம்,சந்தோஷி ==மகிழ்ச்சி ஆகியன.அதாவது விநாயகப் பெருமானை வழிபட்டால் நமக்கு அவர் அறிவு,வெற்றி,ஆதாயம்,சுபம்,மகிழ்ச்சி ஆகிய நன்மைகளை அருள்வார் என்பது திண்ணம்.

சென்னையில் இருந்து வதோதரா (பரோடா) 1746 கி.மீ.,. இங்கிருந்து  64 கி.மீ., தூரத்தில் வாடி. குறுகிய தெருக்களுக்கு நடுவே கோவில் அமைந்துள்ளது.