சென்னை

டபழனியில் அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில் கணவரே மனைவியைக் கொன்றது தெரிய வந்துள்ளது.

வடபழனியில் உள்ள தெற்கு சிவன்கோவில் தெருவில் வசிக்கும் அர்ச்சகர் பால கணேஷ் (வயது 40) தனது மனைவி ஞானப்ரியா (வயது 35) வசித்து வருகிறார்.   வடபழனி சிவன் கோவில் அர்ச்சகர் ஆன பால கணேஷ் ஞானப்ரியாவை காதலித்து மணம் புரிந்துள்ளார்.    இவர் ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தனமாக முதல் தளத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி குளியலறையில் பால கணேஷ் கைகளும் கழுத்தும் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.   தகவல் அளிக்க பாலகனேஷின் போர்ஷனுக்கு சென்ற போது அவரது வீடு திறந்து கிடந்தது.  உள்ளே ஞானப்ரியா பின் தலையில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.    விஜயலட்சுமி உடண்டியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

காவல்துறையினர் ஞானப்ரியாவின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர்.   பால கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    மோப்ப நாய் யாரையும் பிடிக்காமல் அங்கேயே சுற்றி வந்தது.   பலரும் குடி உள்ள வீட்டில் கொள்ளை நடந்தது குறித்தும்  எந்த சத்தமும் யாருக்கும் கேட்காதது குறித்தும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.   மேலும் ஓரிரு பட்டுப் புடவைகளும் சுமார் 15 சவரன் நகைகள் மட்டுமே திருட்டு போனதாக கூறப்பட்டது.

மயக்கம் தெளிந்து எழுந்த பாலகணேஷ் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக போலீசாருக்கு தென்பட்டது.   கதவை யாரோ தட்டியதால் தான் திறந்ததாகவும் அதன் பிறகு நடந்தவை தமக்கு தெரியாது எனவும் கூறினார்.  சத்தம் ஏன் வரவில்லை என்பதற்கு பதில் அளிக்க திணறினார்.    மேலும் கணவரை கட்டிப் போட்டு விட்டு மனைவியை எதற்கு திருடர்கள் கொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கும் ஏதேதோ உளறி உள்ளார்.

அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆராய்ந்ததில் அந்த தெருவில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2 மணி சமயத்தில் யாரும் வரவில்லை என தெரிந்தது.   அத்துடன் பாலகணேஷின் நண்பரும் புரோகிதருமான மனோஜ் என்பவர் 12 மணிக்கு வந்தது தெரிய வந்துள்ளது.     அத்துடன் பாலகணேஷ் உடையில் கிடைத்த ரத்தத் துளிகள் ஞானப்ரியாவுடையது எனவும் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.    மேலும் இரவு 11.30 இருந்து 12 மணிக்குள் ஞானப்ரியா கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

அதன்பிறகு போலீசாரிடம் பாலகணேஷ் உண்மையை கூறி உள்ளார்.  “எனக்கும் ஞானப்ரியாவுக்கும் திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  இதனால் அடிக்கடி என்னிடம் ஞானப்ரியா சண்டையிட்டு வந்தார்.  இதை நான் என் நண்பர் மனோஜ் என்னும் புரோகிதரிடம் கூறி வருவேன்.    ஒரு முறை அவள் மீண்டும் சண்டை இட்டால் கொலை செய்வேன் எனக் கூறினேன்.

இந்த மாதம் 4ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு மீண்டும் சண்டை ஏற்பட்டது.   ஆத்திரத்தில் நான் ஒரு சுத்தியலால் அவள் தலையில் அடித்தேன்.  அவள் மயங்கி விழுந்து இறந்து விட்டாள்.  பிறகு என் நண்பன் மனோஜை அழைத்து அவர் சுமார் 12 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.  ஞானப்ரியாவை திருடர்கள் கொன்று விட்டதாகவும் என்னை கட்டிப் போட்டுவிட்டு சென்றதாகவும் செய்தோம்.

நகை மற்றும் பட்டுப் புடவைகளையும் மனோஜிடம் கொடுத்தேன்.  அவர் என்னைக் கட்டிப் போட்டு விட்டு சென்று விட்டார்.   ஆனால் ரத்தத் துளிகள் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டன. “ எனத் தெரிவித்துள்ளார்.  மனோஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகைகளும் பட்டுப் புடவைகளும் கைப்பற்றப் பட்டு அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

காவல்துறையினர் பாலகணேஷை விசாரணைக்கு அழைத்த போது தாம் மனைவியின் இறுதிச் சடங்கை முடிக்கும் வரையில் வர முடியாது என அவர்களிடம்  சத்தம் போட்டது குறிப்பிடத் தக்கது.