சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்த ஊழியர்கள் குறித்து கோயிலின் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தனது மனைவி மற்றும் மகளுடன் வடபழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். தான் யார் என்ற விவரத்தைக் கூறி வி.ஐ.பி. வரிசையில் செல்லாமல் 50 ரூபாய் நுழைவு சீட்டு வாங்கி சென்றுள்ளார்.

நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் ரூ 150 கொடுத்து மூன்று 50 ரூபாய் டிக்கெட்டுகள் வாங்கிய நிலையில், அவருக்கு இரண்டு ரூ. 50 டிக்கெட்டும் ஒரு ரூ. 5 க்குமான டிக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளது.

45 ரூபாய்க்கு ரசீது வழங்காதது குறித்து நுழைவு சீட்டு வழங்கியவரிடம் கேட்டதற்கு முறையான பதில் எதுவும் கூறாமல் அதனை மாற்றி 50 ரூபாய் டிக்கெட்டாக கொடுத்துள்ளார்.

இதே போன்று வேறு சிலருக்கும் ரசீது வழங்கியதைப் பார்த்து அதிரிச்சி அடைந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் செயல் அலுவலரை சந்தித்து புகார் அளிக்க சென்ற போது அவர் அங்கு இல்லாததால் அவரை தொடர்பு கொள்ள அவரது தொடர்பு எண்ணை கேட்டுள்ளார்.

செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை தர மறுத்த ஊழியர்கள் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சரே தனது தொடர்பு எண்ணை மக்களிடம் பகிரும்போது செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை ஏன் தரமறுக்கிறீர்கள் என்று நீதிபதியின் மனைவி கேட்டுள்ளார்.

அதற்கு, முதலமைச்சர் வேண்டுமானால் தரலாம், செயல் அலுவலர் தரவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோயில் ஊழியர்கள் பலரும் ஒன்று கூடி நீதிபதியை கோயிலை விட்டு வெளியேற்ற முயற்சித்த நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரை தொடர்புகொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியத்தின் உத்தரவை அடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கோயில் ஊழியர்களிடம் இவர் யார் என்ற விவரத்தைக் கூறிய பிறகு ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும், செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை தர மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக புகாரளிக்க செயல் அலுவலரை நீதிமன்றத்துக்கு அழைக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டதை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞருடன், கோயிலின் செயல் அலுவலர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (19-12-2022) நேரில் ஆஜரானார்.

நூறு கோடிக்கும் அதிகமான சொத்தும் ஆண்டுக்கு ரூ. 14 கோடி வருமானமும் உள்ள சென்னையின் மைய்யப்பகுதியில் உள்ள கோயிலில் இதுபோன்று ஊழல் நடைபெறுவது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி மாநிலத்தில் இதை விட அதிக வருமானம் உள்ள கோயில்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தார்.

அறநிலைய துறை ஆணையரும் அவர் கீழ் பணியாற்றும் செயல் அலுவலர்களும் இதுபோன்ற ஊழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சாமானிய மக்கள், பக்தர்கள் தங்கள் குறைகளை புகார்களை தெரிவிக்க செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அனைவர் கண்ணில் படும்படி தகவல் பலகை வைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்த அறிக்கையை ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் தனக்கு வழங்கவேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

மேலும், அறநிலையத் துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக தான் வழக்கு பதியவில்லை என்றும் வடபழனி முருகன் கோயில் செயல் அலுவலரின் வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.