சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற காலக்கட்டத்தில், மாநிலம் முழுவதும தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதைத்தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுத்த ஸ்டாலின், தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அறிவித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகிறார். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், ரூ.4000 பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி, மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், தமிழகத்திலேயே தடுப்பு மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் தயாரிப்பு பணியை தொடங்கு நிறுவனங்களுக்கு 30 சதவிகித முதலீடு தமிழக அரசு வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து, 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் மருத்துவ நிறுவனம் தொடங்க விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்கும் அரசு நிறுவனமான, ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் இன்று மாலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்பட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.