திருச்சி: கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் அடுத்த 28நாட்களுக்கு மதுவை தொடக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வரும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்க உள்ளது. அவசர கால தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2 டோஸ்கள் வழங்கப்பட உள்ள இந்த தடுப்பூசி, முதல் டோஸ் போடப்பட்டால், அடுத்த 28 நாளில் 2வது டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசியின் பயன் கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கும் நேற்று முதல்கட்ட கொரோனா தடுப்பூசிக்கான மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. இதையடுத்து, அவைகள் முன்களப் பணியாளர்களுக்கு போடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்பவர்கள் இரண்டாம் டோஸ் போடப்படும் வரை இடையே 28 நாட்களுக்கு மது அருந்தவே கூடாது. அவ்வாறு அருந்துவது மருந்தை செயல்படாமல் செய்து விடலாம்”.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு, தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கூறியவர், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை யாரும் தனிமைப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு மதுவை சுவைக்கும் முன்களப் பணியாளர்களான சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.