சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும்,  மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நால்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் இதுவரை 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இந்த நோய்க்கான 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை., ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.

தமிழகத்தில் தடுப்பூசிகள் விவரம் குறித்து வெளிப்படையாக கூறப்படுகிறது., இதுவரை 1.58 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கேற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது,  தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.