சென்னை: சென்னையில் உதவி எண்கள் மூலம் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவம் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில்,  மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி கடந்த 22ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். அதில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் அதற்கான எண்களும் வெளியிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட எண்ணில் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவி எண்கள் மூலம் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.