கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,71,877 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பாதிப்புகளுக்கும் இடையே நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி திருவிழாவின் நான்காவது நாளான நேற்று சுமார் 31.39 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை (நேற்று இரவு 8 மணி வரை ) நாட்டில் 11 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 455 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.