சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து,  கிறிஸ்தவர்களுக்கான  கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.  டாக்டர் சைமன் ஹெர்குலஸ். இவர் கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி  கொரோனா தொற்று காரணமாக காலமானார்.  அவரது உடலை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அவரது உடல் வேலங்காடு மயான பூமிக்கு எடுத்துச் சென்று, கொரோனா நெறிமுறைகளின்படி  அடக்கம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். தனது கணவரின் உடல் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்,  என கோரிக்கை வைத்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று, வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார்.