சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, சுகாதாரத் துறையில் இருந்து தடுப்பூசி ஒதுக்கப்பட்டதால் இன்று (ஜூலை 1) சென்னையில் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 45 தடுப்பூசி மையங்களிலும், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களிலும் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் (ஜூன்.29) வரை மொத்தம் 25 லட்சத்து 56 ஆயிரத்து 703 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த தடுப்பூசிகள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை.01) சென்னையில் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி இணையதளத்தின் வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.