சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என தமிழக சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவத்தொடங்கியதையும், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மத்தியஅரசு அனுப்பிய தடுப்பூசிகள் முழுவதும் போடப்பட்டு உள்ளது. இதனால், மேற்கொண்டு பொதுமக்களுக்கு செலுத்த தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி மத்தியஅரசிடம் இருந்து எப்போதும் வரும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ஜூன் 6-ஆம் தேதிக்கு பிறகே தெரியும். இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
இதுவரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது, கையில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 42.58 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.