சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்’ என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்  காணொளி காட்சி (வீடியோ) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய விவரம் வருமாறு,

“கொரோனா தொற்றைப் பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொரோனா பரவலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிடமுடியும்.

கடந்த மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மே 24 முதல் சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துகொண்டுவருகிறது.

சென்னையில் 7ஆயிரத்தை எட்டிய பாதிப்பு தற்போது 2ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும். அதேபோல் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தில் அதிகரித்துவந்த கொரோனா நோய் தொற்று கடந்த 2 நாட்களாக குறைந்துவருகிறது.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. காய்கறி, மளிகை பொருட்கள், ரேஷன் கடைகள் திறப்பு மற்றும் குடும்ப அட்டைகளுக்கு 13 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை விரைவில் வழங்கவுள்ளோம்

அதேபோல் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரத்தை விரைவில் வழங்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றவேண்டும். ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்  ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது

ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சுழல் தமிழகத்தில் தற்போது இல்லவே இல்லை, படுக்கைகள் காலியாக உள்ளது. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்புசி போடுகிறோம். இந்தளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலத்திலும் போடப்படவில்லை. மேலும் ஒரு நாளைக்கு 1,70,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்கிறோம். இதுவும் மற்ற எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை.

மக்களைக் காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்திருக்கிறேன். அதனால்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம்பெற்றுவரும் நபர்களை PPE கிட் உடை அணிந்துகொண்டு நலம் விசாரித்துவந்தேன்.

கொரோனா வார்டுக்குள் போகவேண்டாம் என அன்புக்குரியவர்கள் சொன்னாலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் என்பதற்காகவே நான் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவந்தேன்.

என்னுடைய இந்த நடவடிக்கை குறித்து பலர் பாராட்டினாலும் ‘முதலமைச்சர் அவர்களை உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்’ என உரிமையோடு கண்டிக்கவும் செய்தார்கள். தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படுகிறது.

நான் சென்றதன் மூலமாக மக்களுக்கு நான் செல்வது இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வரவேண்டும் என்பதுதான். கொரோனா முதல் அலைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்க தவறியதால்தான் இரண்டாவது கொரோனா அலையை நாம் எதிர்கொள்ளவேண்டியதாக போயிவிட்டது.

இந்த 2 வது அலையானது தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையாக நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாம் விரைவில் மீண்டாகவேண்டும். திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்து 3 வாரங்களே ஆகிறது.

எத்தனையோ துறைகளில் புதிய திட்டமிடல்கள் செய்யப்படவேண்டும். அதற்கு தடையா இருக்கக்கூடிய இந்த கொரோனா தடுப்பூசி சுவரை நாம் விரைவில் உடைத்து நெருக்கியாகவேண்டும். அதன்பிறகுதான் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை நாம் உருவாக்கவேண்டும்.

நிகழ்கால சோகத்திலிருந்து மீண்டு தமிழக மக்கள் எதிர்கால புத்துணர்வைப் பெற்றாகவேண்டும். கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.