சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின்படி பணிக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது ஏழை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரேனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது.  முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர்,   மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கொரோனா 2வது அலையின் தாக்கத்திற்கு பிறகு தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், த தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தமிழகத்திற்கான  தடுப்பூசி வரப்பெற்றதும், உடனே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் சிரமம் உள்ளது. இதனால்,  கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களை முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நோக்கில்,  தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காட்டினால் தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்தது.

இதனால் தற்போது கிராமப் புறங்களில் தடுப்பூசி போட்டுகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால், அவர்களால் 100 நாள் வேலை திட்டப் பணிகளுக்கு செல்ல முடியவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.