சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வண்ணம் அவரவர்தம் இல்லங்களுக்கே சென்று போடும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று செலுத்தப்படும் என்றும் இதற்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர ஆணையர் ககன்திப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.