புதுடெல்லி: இந்திய விமானத் தாக்குதலில் இறந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்த சர்ச்சைக்கு, மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ள ‘கொசுக் கொலை’ உதாரணம், அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய விமானப் படை, பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.
சர்வதேச ஊடகங்கள் தரப்பில், இத்தாக்குதலில் யாரும் இறந்ததாக செய்திகள் வரவில்லை. மத்திய அரசு மற்றும் பாரதீய ஜனதா தரப்பில்தான் பல மாறுபட்ட எண்ணிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா மற்றும் பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவிக்கும் அதேவேளையில், விமானப்படை தரப்பிலிருந்தோ, சரியான எண்ணிக்கைக் குறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போதைய மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் இதுகுறித்து வேறுபாணியில் கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “நான் உறங்கும்போது கொசுத்தொல்லையாக இருந்ததால், கொசுக்களைக் கொல்லும் பேட் வைத்து அடிக்கத் துவங்கினேன். கொசுக்களைக் கொன்ற பின்னர், நான் நிம்மதியாக தூங்குவது நல்லதா? அல்லது கொல்லப்பட்ட கொசுக்களை எண்ணுவது சரியா? அப்படித்தான், நம் நாட்டில் பலர், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கைக் குறித்து கேள்வியெழுப்புகின்றனர்” என்றுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அடுத்தமுறை இந்தியா இதுபோன்ற தாக்குதல்களை நடத்தும்போது, இத்தகைய சந்தேகப்படுவோர்களை, விமானத்திலேயே கட்டிக்கொண்டு அழைத்துச்சென்று, தாக்கப்படும் இலக்கைப் பார்க்க வைத்து, எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதையும் எண்ண வைத்து, திரும்ப அழைத்துவர வேண்டும்” என்று சுவாரஸ்யமாக நையாண்டி செய்துள்ளார்.
– மதுரை மாயாண்டி