உவரி:
புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது  மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் உவரி புனித அந்தோனியார் திருத்தலமும் ஒன்று.  இங்கு ஆண்டு தோறும் மாதா கோவில் விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடைபெற்றது. தேரில் மாதாவின் திருவுருவ சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக தூக்கி வருவது வழக்கம்.
சம்பவத்தன்று  மாதா  தேர் பவனியின்போது ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.  சப்பரம் வீதி உலா வந்தபோது, ரோட்டோரம் உள்ள அதிக அழுத்த மின் கம்பியில் சப்பரம் (தேர்) சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தேர் மின்சார தாக்குதலுக்குள்ளானது.  இதன் காரணமாக சப்பரத்தினுள் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றபோது உயிரிழந்தார்.

மேலும் பலர் மின்சார ஷாக்கினால் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே சப்பரம் வீதி உலா வருவதால் அந்த பகுதியிலுள்ள மின் வயர்களில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது விபத்து ஏற்பட காரணமான அதிக அழுத்த மின் வயர் அருகிலுள்ள ஆனைகுடி ஊரிலிருந்து வருவது ஆகும். இதை உடனடியாக  நிறுத்த செய்ய முடியாததால் மின்சாரத்தினால் தாக்கப்பட்டவர்கள் அதிகம் என கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் அந்த பகுதியே களேபரமாக மாறியது. மாதாவை தரிசிக்க வந்த பக்தர்கள் அலறி அடித்து அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள்.
இந்த மின் விபத்தின் காரணமாக இதுவரை மொத்தம் 5 பேர் பலியானதாக தவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  10க்கும் மேற்பட்டோர் சாதாரண சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் ஏராளமானோர்  லேசான மின்சார ஷாக்கினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்பாராத இந்த  விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.  போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.