சென்னை: உத்திரமேரூர் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில்  மலம் கலந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த   தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாலவாக்கம் அடுத்த திருவந்தவாரில் , அரசுக்கு சொந்தமான ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திற்குள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த  குடிநீர் தொட்டியில், தண்ணீரை பயன்படுத்த மாணவ மாணவிகள் சென்ற பொழுது, அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து உடனே பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் கூறினர். உடனே  தண்ணீர் தொட்டியை திறந்த  ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர்கள், அதில்  மலம் கலந்திருப்பதை கண்டு பிடித்தனர். இதுகுறித்து உடனே பள்ளி தலைமை ஆசிரியர்  காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில்  சம்பவ இடத்திற்கு, வந்த சாலவாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கல்வி அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர்.

மலம் கலந்ததினால், தான் இந்த இடத்தில் அதிக அளவு துர்நாற்றம் வீசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி மதிய உணவு தயாரிக்கப்பட்டதாக தகவல் பரவியது அடுத்து, மதிய உணவும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாமல் மண்ணில், புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினை சர்ச்சையானது. இதையடுத்து,

இதுகுறித்து சோதனை நடத்த  தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், இது குறித்து மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.  தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்விடத்திற்கு சென்று தண்ணீர் தொட்டி மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து பள்ளி மாணவர்கள், சத்துணவு அமைப்பவர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என்றும், அந்தத்தொட்டியில் முட்டை ஓடு உடன் கூடிய அழுகிய முட்டை கரு இருந்துள்ளது . அதனாலே துர்நாற்றம் இருந்து வந்துள்ளது. இதை தவிர வேறு எந்தவித பிரச்சனையும் கிடையாது. காகம் அந்த முட்டையை கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். மற்றபடி இது மிக அமைதியான ஊர். யாரும் தவறான தகவல்களை சொல்ல வேண்டாம். காக்கா ஏதாவது ஒரு பொருளை கொண்டு வந்து போடுவது நாம் பார்த்திருக்கிறோம். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, விசாரணை செய்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. தவறான தகவல்களை நம்ப வேண்டாம். நாளை அந்த குடிநீர் தொட்டி இடிக்கப்படும் என தெரிவித்தார். இது ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால், இந்த தண்ணீர் தொட்டி,  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக சமீபத்தில் கட்டப்பட்டது.  மாணவ மாணவிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு,   முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அதற்கு என தனி தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. இதன் மூலம்தான், பள்ளி மாணவ மாணவிகள் குடிப்பதற்கும், சமையல் பாத்திரம் கழுவுவது, அரிசி கழுவுவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி, சர்ச்சைக்குரிய குடிநீர் தொட்டி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. அதேபோன்று மற்றொரு குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதிய வன்முறைகளும், குடிநீரில் மலம் கலப்படம் செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. திமுக பிரமுகர்கள், அமைச்சர்களே சாதிய வேறுபாடு காட்டி வருவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளத. அதுபோல,  ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் சம்பவத்தின் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அதை தொடர்ந்து பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது,  காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.