சேலம்: சேலத்தில் செயல்பட்டு வரும் குமாரமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த  நோயாளிகள் அவசரமாக, பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டனர்.

சேலத்தின் மையப்பகுதிகளில் அமைந்துள்ளது மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த மருத்துவமனை  தமிழ்நாடு டாக்டர் எம்.சி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆட்சியால் அலுவலகம் எதிரில்  இந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனை என்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இதில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையின்  அறுவை சிகிச்சை பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த  நோயாளிகள் பதற்றத்துடன் வெளியேற்றப்பட்டனர்.  தீ விபத்தை அடுத்து அரசு மருத்துவமனையில் முதல் மாடியில் இருந்து நோயாளிகள் அவரச அவசரமாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட புகை காரணமாகவும், மின் கசிவு காரணமாகவும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு, நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டாக வும், அங்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.