உத்தராகண்ட் மாநிலத்தின் இந்திய – சீன எல்லைப் பகுதியில் 100அடி உயர மூவர்ணக்கொடியை (100 feet high tricolor) அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஏற்றி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அமைக்கப்பட்ட இந்த கொடி கம்பத்தில் இன்று தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்தியா சீனாவுக்கு இடையேஎல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு லடாக்கில், எல்லையை தாண்டி வந்து பிரச்சினை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவ்வப்போது சீனா எல்லைப்பகுதியில் வாலாட்டி வருகிறது. இதற்கிடை யில் கடந்த ஆண்டு உத்தரகாண்டின் பரஹோதி பகுதியில் சீனப் படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாகவும் தகவல்கள் பரவின. இந்த பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை (ITBP)யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அவ்வப்போது சிறுசிறு மோதல்கள் நடைபெற்று வருவதும் உண்டு.
உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் இந்தியா- சீனா எல்லையை ஒட்டிய பகுதியான பித்தோர்கர் மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றுள்ள மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அங்குள்ள வர்தாயினி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக்கொடியை (100 feet high tricolor) ஏற்றினார். இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழாவை அரசு கொண்டாடி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பித்தோர்கர் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதலமைச்சர் புஷ்கர், அங்குள்ள தனது சொந்த கிராமமான ஹத்கோலாவிற்கும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.