மீரட்:

‘‘அயோத்தி விவகாரத்தில் தீர்வு காண உ.பி அரசு எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும்’’ என்று அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணையில் உள்ளது. இதன் அடுத்த விசாரணை வரும் மார்ச் 14ம் தேதி நடக்கிறது. இந்த விவகாரத்தை நில பிரச்னையாக மட்டுமே கருதுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உ.பி துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா மீரட்டில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அயோத்தி விவகாரத்தில் தீர்வு காண மாநில அரசு எந்த விதத்திலும் முயற்சிக்காது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ராம் ராஜியா ரத யாத்திரையில் அரசுக்கு தொடர்பில்லை. எனினும் இந்த யாத்திரையை மக்கள் வரவேற்க வேண்டும்’’ என்றார்.

39 நாட்கள் கொண்ட இந்த யாத்திரையை மகாராஷ்டிரா ராம் தா மிஷன் சொசைட்டி சாபில் நடத்தப்படுகிறது. இதில் ஆர்எஸ்எஸ், விஹெச்பி, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஆகியவை பங்கெடுத்துள்ளது. 6 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த யாத்திரைக்கு பாஜக அரசு அதிகாரப்பூர்வ ஆதரவு அளிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.