அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர்,உத்திரமேரூர்
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார்.
பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தரான் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர்.
தைமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் 14 நாட்கள் நடைபெறும் அதில் 5 ஆம் நாள் திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர், 9ஆம் நாள் 63 நாயன்மார்கள் திருஉலா, 10ஆம் நாள் தைப்பூசத்தீர்த்தவாரி சிறப்புற நடைபெறுகின்றன, தைப்பூசத்தன்று சேயாற்றில் காஞ்சி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 கிராமங்களில் உள்ள கடவுள் திருமூர்த்திகள் ஒன்று கூடி அருள் பாலிக்கும் திருக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருஊரக வரதராஜப் பெருமாள் (தாயார் சன்னதிகள் தனித்தனியே) கோயில் ஊரின் நடுவில் அருள்பாலிக்கிறார். வடக்கே செல்லியம்மன். தெற்கு எல்லை பாதிரியம்மன், இடையில் தேவேந்திரன், பெரியாண்டவர், வீரபத்திரசுவாமி, நடுவில் மாரியம்மன், தென் கிழக்கே அங்காளம்மன், கிளரொளி அம்மன், வடமேற்கு தர்மராஜர் கோயில் போன்ற சன்னதிகள் பலருக்கு குலதெய்வமாகவும் ஊரின் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றன.
கணபதி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் பிரம்மீசனை வழிபட்ட தலம். ஜேஷ்டாதேவி, மகாபைரவன் ஆகிய கடவுள்களை பக்தர்கள் வழிபடும் சிறப்புத் தலம். பராசரர், பரத்வாஜர், பிருகு போன்ற முனிவர்களும் சோழஅரசனும் அணிசேகரப் பாண்டியனும் வழிபட்டு தைப்பூச நன்னாளில் இறைவனின் தரிசனம் பெற்றதாகத் தலபுரணம் கூறுகிறது.
பிரம்மா பூஜை செய்து நலம் பெற்ற தலம். பிரம்மா தனது சிரசை கிள்ளிய பைரவ சிவனுக்கு தனிச் சன்னதி வைத்து வழிபட்ட தலம். மிகத் தொன்மை வாய்ந்த கோயில். ஜேஷ்டா தேவி வழிபாடு, பைரவ வழிபாட்டுக்கு உகந்த தலம்.
திருவிழா:
தைமாதம் பிரமோற்சவம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம், சிவராத்திரி.
கோரிக்கைகள்:
குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.