அமெரிக்கா: சியாட்டல் நகர ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

ரஷ்ய ராணுவ உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷ்ய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத் துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால் கடந்த 4-ம் தேதி சாலிஸ்பரி நகரில் ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (வயது 33) விஷம் ஏற்றப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷ்யா தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக பிரிட்டன் தூதரக அதிகாரிகள் அனைவரையும் ரஷ்யா வெளியேற்றியது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 14 நாடுகளும் இதே முடிவை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷ்ய தூதர்கள் 4 பேரையும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், பிரான்ஸ், உக்ரைன், லத்வியா அரசுகளும் ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஜ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார். போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை மற்றும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்தளத்தின் அருகாமையில் இந்த தூதரகம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: USA: Trump ordered to close Russian embassy in Seattle, அமெரிக்கா: சியாட்டல் நகர ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு
-=-