லுசியானா:
மெரிக்க சிறைக்கைதிகளிடம்  பல்வேறு நுகர்வுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் கைதிகளை சுரண்டி கொழுத்த லாபத்தில் திளைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலேயே சிறைகைதிகள் அதிகமாக இருக்கும் லூசியானாவில் சிறைக்கைதிகளுக்காக ஒரு மிகப்பெரிய வியாபாரக் கண்காட்சி நடந்தது. கிட்டத்தட்ட மூன்று கால்பந்தாட்ட மைதானங்களை ஒன்று சேர்த்தால் எவ்வளவு பெரிதோ அதைவிட பெரிய மைதானத்தில் அந்த கண்காட்சி நடந்தது. இதிலிருந்தே அமெரிக்காவின் சிறைகளில் இருக்கும் சந்தை எவ்வளவு பெரியது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் சிறைகளை அரசும், சில இடங்களில் தனியாரும் நிர்வகிக்கிறார்கள். இந்த சிறைச்சந்தை யில் தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் சாதனங்களுக்கான டிமாண்ட் மிக அதிகம். இங்கு கைதிகளை உறவினர்கள் அடிக்கடி வந்து பார்ப்பதை தவிர்க்கும் விதத்தில் “வீடியோ சந்திப்பு” வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. இதில் நாற்பது நிமிடங்களுக்கு முப்பது டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
அதுபோல இன்னொரு லாபகரமானத் துறை மருத்துவம் ஆகும். இங்கு மருத்துவச்சேவை செய்கிறேன் என்று நுழையும் தனியார் நிறுவனங்கள், கைதிகளுக்கு தரமற்ற மருத்துவ சேவையளித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்த நிலை அரசு நிர்வகிக்கும் சிறைகளைவிட தனியாரால் நிர்வகிக்கப்படும் சிறைகளில் மிக மோசமாக இருப்பதாக தெரிய வருகிறது.