வாஷிங்டன்:
தெலுங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட 45 டன் எடை கொண்ட 25அடி உயர அனுமான் சிலை அங்கு நிறுவப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிலுள்ள ஹொக்கசின் டெலாவேர் என்ற இடத்தில் அனுமன் சிலை ஒன்று 25 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.  டெலாவேர் சங்கத்தின் இந்து ஆலயத்தின் தலைவர் பதிபந்தா சர்மா தலைமையிலான அறங்காவலர்கள், அங்குள்ள கோவில் அனுமன் சிலையை வைக்க முடிவு செய்து, தெலுங்கனாவில் உள்ள கைவினைஞர்களிடம் சிலை செய்ய கோரியிருந்தனர்.

அதன்படி, சுமார் 25 அடி உயரமுள்ள இந்த சிலை 45 டன் எடையுள்ள சிலை தயாரானது.  கருப்பு கிரானைட்டின் திடமான தொகுதியிலிருந்து இந்த சிலை  பல கைவினைஞர்களால்  செதுக்கப்பட்டுள்ளது.  கைவினை செய்யப்பட்டு முடிக்க ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.

அதையடுத்து, அனுமன் சிலை ஜனவரி மாதம் கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றடைந்தது. சிலையை வரவேற்ற அமெரிக்கா வாழ் இந்துக்கள்,  டெலாவேர் இந்து கோவில் அருகே நிறுவி உள்ளனர்.

இதுகுறித்து டெலவேர் சங்கத்தின் இந்து கோயில் தலைவர் பதிபந்தா சர்மா கூறுகையில், கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக அடுத்த ஆண்டு  சிலையை நிறுவது தொடர்பான விழா  நடத்த  வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இந்த ஆண்டே அதைச் செய்துவிட்டோம்,  இதனால் சர்வவல்லவரான அனுமான் இந்த தொற்றுநோயைப் போக்க எங்களுக்கு உதவுகிறார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவிலேயே  உயரமான  இந்து சுவாமி சிலை என்ற பெருமையை 25 அடி உயர அனுமன் சிலைபெற்றுள்ளது. மேலும்,  இரண்டாவது உயரமான வழிபாடு தொடர்பான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த 25 அடி அனுமன் சிலையை உருவாக்கி,  அமெரிக்காவிற்கு கொண்டு வர சுமார் 76 லட்சம் செலவானதாகவும் கூறப்படுகிறது.