இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மறுபறம், இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தால் தங்கள் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், ஈரானின் இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலோ அல்லது ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினாலோ மிகப்பெரிய பிரளயத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
காசாவைத் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதலை கடந்த ஓராண்டாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் இதுவரை பல லட்சம் பேரை கொன்று குவித்துள்ளது.
ஐநா-வின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத இஸ்ரேலின் இந்த இனப்படுகொலை தொடர்ந்து வரும் நிலையில் ஈரான் ராணுவம் நேரடியாக களத்தில் குதித்துள்ளது.
ஈரானின் ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா எச்சரித்துள்ள போதும் அதிபர் ஜோ பைடன் எடுக்கும் முடிவை பொருத்தே மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்பும் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடியில் இறங்கினால் அது புதிய அதிபருக்கே தலைவலியாக இருக்கும் என்பதால் பைடனின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் தற்போதைய துணை அதிபரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் ஈரானை வன்மையாக கண்டித்துள்ளதுடன் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்துள்ளது குறிப்படத்தக்கது.
தவிர, தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை கொலை செய்ய ஈரான் சதி செய்ததாக குற்றம்சாட்டிய மற்றொரு அதிபர் வேட்பாளர் டிரம்ப் ஈரானை அழிக்கப்போவதாக ஏற்கனவே எச்சரித்திருந்தார்.