வாஷிங்டன்:

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாட்ரிக் ஷானஹான் கூறும் போது, விரோதப் போக்குடன் செயல்படும் ஈரான் படைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கை கையாளவில்லை.  எங்கள் தேசிய நலனை பாதுகாக்கவும், பிராந்தியம் எங்கும் பணியாற்றும் எங்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஓமன் வளைகுடாவில் சமீபத்தில் நடந்த எண்ணெய் டேங்கள் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களுடன் புதிய படங்களை அமெரிக்கா பகிர்ந்துள்ளது.

இந்நிலையில், அணு சக்தி செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் 2015-ம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை கண்டுகொள்ளப் போவதில்லை என்று இன்று ஈரான் அறிவித்தது.

மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளின் பயன்பாட்டு அளவு கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பை ஜுன் 27-ம் தேதிக்குள் மீறவுள்ளதாகவும் ஈரான் கூறியிருந்தது.

ஈரானின் இந்த அறிவிப்புக்குப் பிறகே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு படையை அதிகரிக்கும் முடிவை அமெரிக்கா அறிவித்துள்ளது.