சியோல்.

டகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனை மற்றும் அமெரிக்கா, ஜப்பானுக்கு எதிரான போக்கு காரணமாக அமெரிக்கா வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில்  போர் விமானங்களை வடகொரியாவுக்குள்  அனுப்பி  எச்சரிக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு ஐ.நா பல முறை கண்டனம் தெரிவித்தும்  பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது

ஆனால், வடகொரியா அதையும் மீறி  அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் 4 கப்பல்கள் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனாலும், வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அதன் போக்கு போருக்கு தயராக இருப்பதாகவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும், ஜப்பானை தவிடுபொடியாக்கி விடுவோம் என்றும்  எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்த நேற்று இரவு திடீரென  அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளன.

குவாம் தளத்திலிருந்து அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பகுதியில் பறந்தன. தென் கொரியாவில் சென்றபோது அவற்றுடன் தென்கொரியாவின் 2 போர் விமானங்களும் சென்றன. இதேபோல் ஜப்பான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஜப்பான் நாட்டின் போர் விமானங்களும் இணைந்துகொண்டன.

இதன் காரணமாக வடகொரியா கடும் கோபத்தில் இருப்பதாகவும், இதற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.