அமெரிக்கா : தந்தையால் தண்டிக்கப்பட்ட மூன்று வயது இந்திய பெண் குழந்தை மாயம்!

டெக்சாஸ்

இந்தியத் தந்தையால் தண்டிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போய் விட்டார்.

கேரளாவை சேர்ந்த வெஸ்லி மாத்யூஸ் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார்.  இவரது மனைவி சினி.  இவர்கள் இருவரும் ஒரு பெண் குழந்தையை இந்தியாவில் இருந்து தத்து எடுத்து ஷெரின் மாத்யூஸ் எனப் பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.  தற்போது மூன்று வயதாகும் அந்தப் பெண் சற்றே வளர்ச்சிக் குறைபாட்டுடன் இருந்துள்ளார்.  அதனால் அவருக்கு அடிக்கடி ஊட்டமான உணவுகளை அவர் விழித்திருக்கும் போது கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

கடந்த சனிக்கிழமை அன்று விடியற்காலை சுமார் 3 மணிக்கு சினி தூங்கிக் கொண்டிருக்கும் போது மாத்யூஸ் தனது மகளை பால் குடிக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளார்.  அதை அந்தக் குழந்தை மறுத்து விட்டாள்.  என்ன சொல்லியும் கேட்காததால் மாத்யூஸ் அந்தக் குழந்தையை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டார்.  வெளியே சென்ற குழந்தை தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில் நின்றுக் கொண்டது.  தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டார்.  ஆனால் 15 நிமிடங்களாகியும் ஷெரின் திரும்பி வராததால் அவளை மாத்யூஸ் தேடிச் சென்றுள்ளார்.  எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இதன் பின்பு நான்கு தினங்கள் கழித்து இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.  நான்கு தினங்களாக அவளை தேடிக் கொண்டிருந்ததாகவும் குழந்தை தானாகவே திரும்பி வந்து விடும் என நம்பிக் கொண்டிருந்ததாகவும் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.  பெண் குழந்தையை கொடுமை செய்ததாகவும், தவிக்க விட்டதாகவும் குற்றம் சுமத்தி மாத்யூஸை கைது செய்த போலீசார் 250000 அமெரிக்க டாலர் ஜாமீனில் அவரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இது குறித்து டெக்சாஸ் போலீசார் அந்தப் பெண் குழந்தையின் புகைப்படம், மற்றும் அங்க அடையாளங்களுடன் அனைத்து ஊடகங்களிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   அதை முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  இது வரை ஏதும் தகவல் கிடைக்கவில்லை.   அந்த பகுதியில் வசித்து வரும் ஒருவர் அங்கு ஓநாய்களின் வகையை சேர்ந்த நாய்கள் உலவும் இடம் எனவும், அந்த இடத்தில் குழந்தையை தனியே அனுப்பியது தவறு எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
3 Year old girl child missing after her fatther's punishment