சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன் பென்ஸ்கோவிஸ்கி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் HGlobal எனும் பெயரில் கால்சென்டர் நடத்திவந்த ஹிதேஷ் மதுபாய் பட்டேல், ஆள்மாறாட்டம் மூலம், பல மில்லியன் டாலர் அமெரிக்கர்களின் பணத்தை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளானார்.

இந்நிலையில், அவர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். ஆனால், அங்கே கைதுசெய்யப்பட்டு, சர்வதேச சட்டத்தின்படி அமெரிக்காவிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹாஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர், வருகின்ற புதன்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய அளவில் இயங்கும் பல கால்சென்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடுகளின் எல்லை, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி