ஸ்ரீநகர்

பாதுகாப்பு காரணமாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை ஸ்ரீநகரில் இருந்து  இடமாற்றம் செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பாலகோட் நகரில் தாக்குதல் நடத்தியது. இதில் யாருக்கும் எவ்வித அபாயமும் உண்டாகவில்லை என பாகிஸ்தான் அறிவித்தது.

ஆயினும் பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அவர்களை விரட்டி சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு பிறகு விடுப்பில் இருந்த அபிநந்தன் மீண்டும் பணியில் இணைந்தார்.

தற்போது இந்திய விமானப்படை அபிநந்தனை ஸ்ரீநகர் விமானப்படை முகாமில் இருந்து மாற்றி உள்ளது. காஷ்மீர் பகுதியில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த இட மாறுதல் செய்யப்பட்டுல்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு விமானப்படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.