சியாட்டல்:

தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க  மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன், தமிழர்களை அடிக்கடி பொறுக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிவருகிறார். இதற்கு பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், “இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக சுப்ரமணியன் சுவாம, அமெரிக்காவில் உள்ள சியாட்டலுக்குக்கு வந்தார். இந்தத்  தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.

 

கூட்டம் நடக்கும் அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் குவிந்த தமிழர்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனம் தெரிவிக்கும்  பதாகைகளுடன் முழக்கமிட்டனர். சிலர்,  பார்வையாளர்கள் போல் அரங்கத்திற்குள் சென்று அங்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த தயாரானார்கள்.

 

கைக் குழந்தை ஒருவர் தமிழன் டா என்ற பதாகையுடனும், அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டினவனுக்கு ஹார்வர்ட் ஒரு கேடா போன்ற பதாகைகளையும் தமிழில் வைத்திருந்தனர்.

தமிழர்களின் எதிர்ப்பை அறிந்த விழாக்குழுவினர், சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்தனர். ஆனால் தமிழர்கள் அதைக் கவனித்துவிட்டனர்.

உடனே, அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் முழக்கமிட்டனர்.

“நாங்கள் தமிழர்கள்.. நாகரீகம் மிக்கவர்கள்”

“தமிழர் நாகரீகம் தொன்மையானது தமிழர் நாகரீகம் மேன்மையானது”

“நாகரீகம் தெரியாத ‘பொறுக்கி’ சுப்ரமணிய சாமியே திரும்பிப் போ!”

“நாகரீகம் தெரியாத பொறுக்கி சுவாமி இந்தியப் பாரம்பரியம் பற்றிப் பேசுவதா”  என்றெல்லாம் ஆங்கிலத்தில் முழக்கமிட்டபடி சுவாமி வந்த காரை நோக்கி முன்னேறினார்கள்.

நிலைமையை உணர்ந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் விசாரித்தார்கள். அவர்களிடம் தமிழர்கள், தமிழனத்தை தரக்குறைவாக பேசிய அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றார்கள். உடனே காவல்துறையினர்,  அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

அமெரிக்காவில் தமிழர்களின் எதிர்ப்பை எதிர்ப்பார்க்காத சுப்ரமணியசாமி பதட்டத்துடன் காணப்பட்டார்.  விழா அரங்க வாசலிலும் தமிழர்கள் குழுமியிருந்ததைப் பார்த்த விழாக்கமிட்டியினர் சுவாமியை பின்வாசல் வழியாக அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சுப்ரமணிய சாமி பேசும் வரை அமைதியாக அரங்கத்திற்குள் இருந்த தமிழர்கள், அவர் பேச ஆரம்பித்ததும் கைத்தட்டி ஆரவாரம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  ஆகவே பேச முடியாமல் நின்றார்  சுப்ரமணியன் சுவாமி.

உடனே, தமிழர்கள் ‘நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம், தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

வெளியே வந்த தமிழர்கள், நிகழ்ச்சி முடியும் வரையிலும் அரங்க வாசலிலேயே காத்திருந்தனர். தமிழர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என்று நம்பி வந்த சுவாமி, மீண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்த ஒரு தமிழ்ப் பெண்மணி சுவாமியிடம் மிகவும் ஆவேசத்துடன், “தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா? என் அண்ணன் தம்பிகளையை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள்,” என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் கேட்டார்.

இதையடுத்து விழாக்குழுவினர் சுப்ரமணிய சாமியை விரைவாக அழைத்துச் சென்று விட்டனர்.

மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தனர் தமிழர்கள்.  இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அங்கேயே இருந்து, சுப்ரமணிய சாமி திரும்பிப் போகும் வரையிலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.