டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரான் தயாராக உள்ளதென்றும், ஆனால் அதற்குமுன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி.

அவர் கூறியுள்ளதாவது, “சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராகவே இருக்கிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்க வேண்டும்” என்றார்.

வெளியுறவுத் துறையின் தலைமை அதிகாரி முகமது ஜவாத் ஸாரிஃபுடன் நிகழ்ந்த சந்திப்பிற்கு பின்னர் இவ்வாறு தெரிவித்தார் ஈரான் அதிபர். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை சந்திக்க அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்பட்ட வாய்ப்பை தான் நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர்.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானுடன் போடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றமும் பகையும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.