ஜெருசலேம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர்.அந்தோனி ஃபெளசிக்கு, இஸ்ரேல் நாட்டின் டேன் டேவிட் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு, அவரின் சேவையைப் பாராட்டி, $1 மில்லியன் பரிசு அறிவித்துள்ளது.
‘தற்காப்பு அறிவியல்’ மற்றும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு உள்ளிட்ட பணிகளில் தன்னை இடையறாது ஈடுபடுத்திக் கொண்டதற்காக இந்த பரிசுத் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், ஏற்கனவே எச்ஐவி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, பெரியளவிலான அங்கீகாரத்தைப் பெற்றார். கோவிட்-19 பரவலின்போதான நெருக்கடியான காலத்தில், எதிர்ப்புகளையும் மீறிய இவரின் செயல்பாடுகளை குறிப்பிட்டு பாராட்டியுள்ளது டேன் டேவிட் பவுண்டஷேன்.
தற்போது 80 வயதாகும் டாக்டர்.ஃபெளசி, அமெரிக்காவில் மொத்தம் 7 அதிபர்களின் கீழ் பணியாற்றியுள்ளார். கடந்த 1984ம் ஆண்டிலிருந்து அலர்ஜி மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.