நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், மொத்தம் 5 விஷயங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
கொரோனா வைரஸ்
இந்தாண்டின் தொடக்கம் வரை, கொரோனா வைரஸ் என்பது அமெரிக்காவில் கேள்விப்படாத பெயராக இருந்தது. ஆனால், தற்போதைய சூழலிலோ, அதுதான் அதிபர் தேர்தலின் முதன்மைப் பிரச்சார பொருள்.
அந்நாட்டில் இதுவரை 220000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தற்போதுவரை, அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.3 மில்லியன் என்பதாக உயர்ந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்த கொரோனா தாக்கத்தால், தற்போது அந்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் பெரியளவில் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா என்பது தேர்தலுக்கான பிரதான பேசுபொருளாகியுள்ளது.
மருத்துவம்
ஏசிஏ எனப்படும் ‘கட்டுபடியாகக்கூடிய மருத்துவ செலவு சட்டம்’, இத்தேர்தல் பிரச்சாரத்தில், இரண்டாவது முக்கிய பேசு பொருளாகியுள்ளது. இதை ‘ஒபாமாகேர்’ என்று சொன்னால் டக்கென்று பலருக்கும் தெரியும். இந்தச் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா? என்பது பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.
பொருளாதாரம்
டொனால்ட் டிரம்பின் முதல் 3 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவும் பெரிதாக பாதிப்படையவில்லை. ஆனால், கொரோனா புண்ணியத்தால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
தற்போதைய நிலையில், 23 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையை இழந்துள்ளனர். வேலையின்னை விகிதம் 14.7% என்பதாக அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்கள் முன்புவரை 3.5% என்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
இனவெறி பிரச்சினை
ஜார்ஜ் பிளைட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், அந்நாட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாட்டில் பெரியளவில் கலவரம் வெடித்தது. அதேசமயம், அச்சம்பவம் தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்து நிலைமையை இன்னும் சூடாக்கியது. எனவே, நிறவெறியும் இத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது தெரிகிறது.
கருக்கலைப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்கள்தொகையில் 15% அளவைக் கொண்ட எவான்ஜலிகல் பிரிவினரின் பங்கு பிரதானமானது என்பதால், கருக்கலைப்பு என்பதும் இத்தேர்தலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.