இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அணு ஆயுத கிடங்குகள் என பல இடங்களையும் இஸ்ரேல் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதுடன் ஈரான் தலைமையை அகற்றவேண்டும் என்ற இலக்குடன் செய்யப்பட்ட வருகிறது.

அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இவ்விரு நாடுகளுக்கு இடையிலான இந்த போர் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருவரும் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக, ஈரான் தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்க படைகளை இஸ்ரேலுக்கு அருகே குவித்து வருகிறது.

இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியின் பாதியிலேயே அங்கிருந்து அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.

இதையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதே இந்த போருக்கு காரணம், அதனிடம் அணு ஆயுதம் எதுவும் இருக்கக்கூடாது. உடனடியாக அனைவரும் தெஹரானை விட்டு வெளியேற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த பதிவை அடுத்து, ஈரானின் பல்வேறு இடங்களில் குண்டு மழை பொழிந்ததாகவும் ஈரானில் முக்கிய அணு உலை செயல்பட்டு வரும் நடான்ஸ் நகருக்கு அருகிலும் குண்டு மழை பொழிந்ததாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், இஸ்ரேலில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் போரில் ஈரானில் 225 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.