வாஷிங்டன்
ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் கோழைகள் போல் ஒளிந்துக் கொண்டதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி உள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு அல்பானீசுடன் இணைந்து அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். பைடன், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், கூட்டணி நாட்டுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அப்போது ஜோ பைடன்,
” தன்னுடைய மக்களின் படுகொலைக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதால் அதற்கான கடமையையும் கொண்டுள்ளது. நாங்கள் இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக, தற்காத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
ஹமாஸ் அமைப்பு காசா முனையிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, பரந்து விரிந்துள்ள பாலஸ்தீனிய மக்களின் பிரதிநிதியாக இல்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
பாலஸ்தீனிய மக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட கோழைகள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர். காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி”
என்று கூறியுள்ளார்.