உலகப்போருக்கு ரஷ்யா வழிவகுப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.

உக்ரைன் மீது படையெடுப்பதைக் கைவிட ரஷ்யா மறுத்துவருவதாகவும், அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிபர் ஜோ பைடனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடா தனது நாட்டு குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற நேற்று உத்தரவிட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது.

கிரிமியா விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தகராறு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளதை கண்டித்து நேட்டோ படையுடன் சேர்ந்து அமெரிக்க துருப்புகளும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் பட்சத்தில் அங்குள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் ரஷ்யா உடனான ராஜ்ஜிய உறவிலும் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதே காரணத்திற்காக கனேடியர்களை அங்கிருந்து வெளியேற கனடா அரசு நேற்று அறிவுறுத்திய நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.