வாஷிங்டன் :

மெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜனவரியில், அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

அவர் நேற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்யா நாதெல்லா உள்ளிட்ட முக்கிய தொழில் பிரமுகர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடினார். அப்போது, புதிய அரசின் பொருளாதார கொள்கை குறித்து, அவர் பேசியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட கொரோனா நிவாராண சட்டம் போல, மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் இயற்றப்படும்.இதை, பார்லி., உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் வாகன தயாரிப்பு துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் வாகனங்களுக்கு, நாடு முழுதும், 5.50 லட்சம், ‘சார்ஜ்’ மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், நல்ல ஊதியத்துடன், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். பசுமை எரிசக்தி தொடர்பான ஆய்விற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகனம், பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு துறைகளில் வருங்கால தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். .இவ்வாறு, அவர் பேசினார்.