வாஷிங்டன்: இன்றைய நவீனகால இந்தியாவின் நிலையை, ஒரு வெற்றிக் கதையாக நாம் மதிப்பிட வேண்டுமென்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

அதாவது, அரசியல் கட்சிகளுக்கிடையிலான கசப்புணர்வு & மோதல்கள், பல்வேறான ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கிடையிலான மோதல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்த முன்னேற்றம் சாத்தியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவி வகித்த ஒபாமா, சமீபத்தில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்தான் இந்த விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 1990களின் துவக்கத்தித் தொடங்கிய உலகமயமாக்கல் நடவடிக்கைகளின் தொடர்ச்சி, இந்தியாவின் மறைந்திருந்த பல திறமையான தொழில்முனைவோர்களை வெளியே கொண்டுவந்தது மற்றும் இதன்மூலம் பலகட்ட வளர்ச்சியும் சாத்தியப்பட்டது.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்கள்தொகையில் மத்தியதர வர்க்கத்தின் பெருக்கம் உள்ளிட்டவை சாத்தியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது புத்தகத்திற்கு, ‘ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’ என்ற பெயரிட்டுள்ள ஒபாமா, கடந்த 2008ம் ஆண்டு தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காலம் முதல் தனது முதல் பதவிகாலம் முடியும் காலம் வரையிலான சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.